மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்தும் ,மின் கட்டண உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து பத்திரகயாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன்,

‘‘தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. குறிப்பாக மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறியிருந்த நிலையில் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் மாதந்தோறும் மின் அளவீடு நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதனை செயல்படுத்தாமல் வரலாறு காணாத அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது தி.மு.க. ஆட்சியில் நல்ல திட்டங்களை எதிர்பார்த்த மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி ஏமாற்று வேலை என தெரிந்துவிட்டது.

தற்போது சொத்துவரியை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். கடந்த ஆட்சியின் போது தி.மு.க. சொத்து வரி உயர்த்தியதற்கு பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தியது. தற்போது இரட்டை வேடம் போட்டுக்கொண்டு சொத்துவரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. சொத்து வரி மட்டுமில்லாமல் பால் விலை, குடிநீர் வரி, வீட்டு வரி என அனைத்தையும் ஏற்றியுள்ளது வேதனை அளிக்கிறது. மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கமாக வெளிப்படை தன்மை இல்லாமல் தி.மு.க.அரசு செயல்பட்டு வருகிறது.

சிறுவர்கள் முதல் பலரும் தற்போது போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அந்த அளவிற்கு தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகிறது. இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் பிடித்து போதை பொருளில் சாதனை படைத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய இந்த அரசு தவறிவிட்டது.

மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. தற்பொழுது மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர். இதே போன்று தி.மு.க. அரசு செயல்பட்டால் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை அளிப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. தமிழகத்தில் மின்சார வாரியம் நஷ்டத்தில் இருக்கிறது என்று அமைச்சர் கூறுகிறார். நஷ்டம் அடைவதற்கு ஏழை எளிய மக்களா காரணம். மக்கள் மீது கைநீட்டுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும், நஷ்டம் கூடாது என்றால் மின்சார தடவாள பொருட்கள் வாங்கும் போது ஊழல் செய்யக்கூடாது. வெளிமாநிலங்களில் மின்சாரம் கொள்முதல் செய்யும் போது லஞ்சம் வாங்க கூடாது.

இந்த பணிகளை முறையாக செய்தால் மின்சாரத்துறை நஷ்டத்தில் செயல்படாது. விலை ஏற்றுவது தான் திராவிட மாடலா. வாக்குறுதி அடிப்படையில் மக்கள் உங்களூக்கு வாக்களித்தார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மேலும் மக்களுக்கு சுமையை அதிகரிக்கிறீர்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுக்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. இதுதான் திராவிட மாடலா. தமிழக மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது.

ஊழலுக்கு தி.மு.க. திராவிட மாடல், நேர்மைக்கு காமராஜர் மாடல்தான் வேண்டும். கொரோனா தாக்கத்தை விட மின் கட்டண தாக்கம் மக்களை பெரும் அளவு பாதித்துள்ளது. மின் கட்டண உயர்வால் மின்கட்டணம் மட்டும் உயர்வதில்லை, வாடகை கட்டணம், பராமரிப்பு கட்டணம், வியாபார நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்துகிறார்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்ததுஎன பல்வேறு விலை உயர்வதற்கு காரணமாக மின் கட்டண உயர்வு உள்ளது.

நீங்கள் எந்த மாடல் பேசினாலும், தமிழக மக்கள் உங்களை நம்பபோவதில்லை, உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. உங்களுடைய உண்மையான முகத்தை மக்கள் தெரிந்து கொண்டனர். இதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறை வாக்குகளால் பிரதிபலிப்பார்கள் என்பதில் மாற்றம் கிடையாது’’ என்று பேசினார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal