சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. தலைமையிடம் ராஜினாமாக கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்கடிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன் முதல் பெண் சபாநாயகர் என்ற அந்தஸ்தை சுப்புலட்சுமிக்கு வழங்க ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். ஆனால், தேர்தல் தோல்வின்னு ஈரோடு மாவட்ட முக்கிய புள்ளி மற்றும் திமுக நிர்வாகிகள் செய்த சதி செயலே காரணம். இது தொடர்பாக, மாவட்ட முக்கிய புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் அளித்தார்.

ஆனால், அந்த கடிதத்தை மு.க.ஸ்டாலின் கண்டுக்கொள்ளவில்லை. தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையாவது திமுக தலைமை தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. சமீபத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில், சுப்புலட்சுமி ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதனால், சுப்புலட்சுமி ஜெகதீசன் கடும் அதிருப்தி அடைந்தார்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலர் வைகோ பற்றிய ஆவணப்பட வெளியீட்டு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதை விமர்சித்து சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன் முகநூலில் சில நாட்களுக்கு கருத்து பதிவிட்டார். அதில், 1993 திமுக விலிருந்து கலைஞரையே வெளியேற்றி விட்டு திமுகவை கைப்பற்றும், உருவாக்கும் முயற்சியில் பணக்காரப் பயல்களோடு சேர்ந்து கொண்டு கோபாலசாமி கொக்கரித்த காலத்தில் கலைஞர் பட்ட பாட்டை, மன உளைச்சலை, உற்ற வேதனையை அருகிருந்து கண்டவர் நாங்கள்! அந்த நிகழ்வுகள் 30 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம் எங்களுக்கு! பேசிய பேச்சுக்கள், ஏசிய வசவுகள், சீண்டிய கிண்டல்கள், செய்த அவமதிப்புக்கள், ஏகடியங்கள் கணக்கில் அடங்காதவை! ஆட்சியில் அமர்ந்துள்ளோருக்கு அது மறந்திருக்கலாம். அவர் தம் அணுகுமுறை வேறு. நாங்கள் ஏற்பதற்கில்லை சுய மரியாதை எமக்கு கொஞ்சம் உண்டு என விமர்சித்துள்ளார்.

மற்றொரு பதிவில் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவையும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண விழாவையும் ஒப்பிட்டு இருந்தார். இதை விட ஒருபடி மேலாக சென்று லஞ்சம் இல்லாத தமிழக அரசின் ஒரு துறையை சொன்னா ஒரு கோடி பரிசு என பதிவிட்டுள்ளார். இது போன்ற பதிவுகளால் திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்சி மேலிடத்திற்கு தன் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், துணைப் பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை திமுக தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal