கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி உலக மக்களை இன்னும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதானோம் கூறியதாவது:-

‘‘உலகம் முழுவதும் கொரோனோ தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகிறது. 2020 மார்ச் மாதத்தை விட தற்போது பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கொரோனா இன்னும் முற்றிலும் முடியவில்லை. ஆனால் அதன் முடிவு நமக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது.

இந்த வாய்ப்பை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதிக வைரஸ் மாறுபாடுகள், இறப்புகள் அதிகரிப்பதற்கான நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal