டெல்லி மேலிடத்தையும், நீதிமன்றத்தையும் நம்பியிருந்த ஓ.பி.எஸ்.ஸுக்கு ஏமாற்றமே மிஞ்ச, அதிக டென்ஷனில் இருக்கிறாராம். ஆனால், எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியில் தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறாராம்.

அதிமுகவில் உட்கட்சி மோதல் இன்னும் வரவில்லை. கன்னித்தீவு கதையாக இந்த மோதல் நீண்டு கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் இரண்டு நீதிபதி அமர்வு அறிவித்துவிட்டது.

இதையடுத்து அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்து இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வர வாய்ப்புகள் உள்ளன.

அதிமுகவில் உட்கட்சி விவகாரங்கள் இப்போது டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் டெல்லி மேலிடம் இதில் தலையிடவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கும்படி டெல்லி மேலிடத்தை ஓபிஎஸ் தரப்பு அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் இது உங்கள் உட்கட்சி விவகாரம். இதில் ஒரு சாராருக்கு ஆதரவாக தலையிட்டு நாங்கள் பிரச்சனை செய்ய விரும்பவில்லை. நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று நாசுக்காக டெல்லி தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

டெல்லி மேலிடம் இப்படி இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருக்க வேறு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் உட்கட்சி மோதல் தீர்ந்துவிட்டால், அக்கட்சி பலம் பெற்றுவிடும். பாஜக இதனால் இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் பிடிக்க முடியாது. பாஜக வளர வேண்டும் என்றால் அதிமுகவில் உட்கட்சி மோதல் நீடிக்க வேண்டும். அப்போதுதான் பாஜக எதிர்க்கட்சி போல செயல்படும் என்று டெல்லி தலைமை நினைக்கிறதாம்.

இதன் காரணமாகவே பாஜகவிற்கு அதிமுக “மேட்டரில்” இப்போது எந்த ஆர்வமும் இல்லை என்கிறார்கள். 2024 லோக்சபா தேர்தல் வரை எப்படியாவது அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவ வேண்டும் என்று பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது. டெல்லி தரப்பில் இருந்து எந்த சப்போர்ட்டும் கிடைக்காத காரணத்தால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள்தான் கடைசியில் உதவி செய்வார்கள் என்று நினைத்தேன்.

அவர்களே உதவி செய்யவில்லையே என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு புலம்பி வருகிறதாம். கிட்டத்தட்ட டெல்லி தரப்பு ஓ பன்னீர்செல்வத்தை கைவிட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது. எதிர்காலத்தில் உதவினால் உண்டு. இப்போது டெல்லி இதில் தலையிடுவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை என்றுதான் கூறப்படுகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியும் முன்பு எப்போதும் இல்லாத மகிழ்ச்சியுடன் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வதிற்கு அடுத்தடுத்து தோல்விகளாக வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஓ.பி.எஸ்.!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal