துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 7 கோடியே 36 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், நடப்பு தேர்தலில் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், இந்த விவரங்கள் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை குறித்து முறையான விளக்கங்கள் எதுவும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் 11 கோடியே 6 லட்சம் ரூபாய் ஸ்னோ ஹவுசிங் நிறுவனத்திற்கு கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்த உதயநிதி ஸ்டாலின், 2026 ஆம் ஆண்டு வேட்பு மனுவில் ரூ.10 கோடி என குறிப்பிட்டு இருக்கிறார். மீதமுள்ள ஒரு கோடியே 6 லட்சம் பணம் திருப்பி செலுத்தப்பட்டதா என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கு முன் 2 கோடி ரூபாய் வருமானம் இருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது 10 கோடியே 98 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். வருமானம் மற்றும் சொத்து அதிகரித்தது கூறும் குறித்து உரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் சொத்து சொத்து குறித்து தவறான முழுமையற்ற தகவல்களை வேட்பாளர்கள் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது என்பதால் இந்த முரண்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கும், கார்ப்பரேட் விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வேட்புமனுவில் தவறாக தகவல்கள் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் துவங்கி விட்டதால், இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு ஏப்ரல் 20-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கு பூதாகரமாகுமா..? புஸ்வானமாகுமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
