பஞ்சாபில் பா.ஜ.க. மேலிடம் அவசர ‘ஆபரேசனை’ தொடங்கியிருப்பதால், பதற்றத்தில் கெஜ்ரிவால் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

சில மாதங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை பெற்றது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றியதோடு, டெல்லியை கடந்து ஆம் ஆத்மி தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தியது.

இதன் காரணமாக குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே குஜராத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களை கவரும் வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகிறார்.

அதேபோல் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பாஜகவில் ஐக்கியமாகி வருவதால், காங்கிரஸ் கட்சியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனிடையே அண்மைக் காலமாக ஆபரேசன் தாமரை என்ற பெயரில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ-க்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

அண்மையில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு தாவினர். சில மாநிலங்கள் கட்சிகளை பிரிந்து பாஜக ஆட்சி அமைத்து வந்தது. ஏன் சமீபத்தில் கூட கோவாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். ஆனால் பாஜகவின் கணக்கு பீகார் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தோல்வியடைந்தது.

டெல்லியில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 20 எம்எல்ஏ-க்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில சட்டமன்றத்திலேயே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் பாஜக மீண்டும் ஆபரேசன் தாமரையை பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்த முயற்சித்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை பாஜக அணுகியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி, அரசாங்கங்களை கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது’’ என குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் ஹர்பால்சிங் சீமா கூறுகையில், ‘‘ஆபரேஷன் தாமரை திட்டத்தை பஞ்சாப்பில் செயல்படுத்த பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசி வருவதாகவும்’’ குற்றம்சாட்டினார்.

ஆக, மொத்தத்தில் பஞ்சாபில் பா.ஜ.க. தொடங்கிய ஆபரேஷன் முடிவு விரைவில் தெரியவரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal