ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ராஜாத்தி அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் செரிமானக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவஸ்தை பட்டு வந்தார். திட உணவுகள் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் திரவ வகை உணவுகளையே அவர் உட்கொண்டு வந்தார். காய்கறி சூப், பழச்சாறுகள், பால், போன்ற ஆகாரங்களை மட்டும் உட்கொண்டு வந்த ராஜாத்தி அம்மாளுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே அவருக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஜெர்மனில் உள்ள பிரபல மருத்துவமனையான ஙிஷீஸீஸீ மருத்துவமனைக்கு ராஜாத்தி அம்மாளை அழைத்துச் சென்று சிகிச்சை வழங்க முடிவு செய்தார் கனிமொழி. அதன்படி கடந்த மாதம் 26ஆம் தேதி ராஜாத்தி அம்மாளுடன் ஜெர்மனி சென்றார் கனிமொழி. அங்கு ராஜாத்தி அம்மாளுக்கு அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு செரிமான மண்டல கோளாறுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி செல்ல ராஜாத்தி அம்மாள் மிகுந்த தயக்கம் காட்டிய நிலையில் கனிமொழி தான் அவரை வலியுறுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் இருந்து ராஜாத்தி அம்மாள் நேற்று காலை தான் சென்னை திரும்பினார். இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும், பொருளாளர் டி.ஆர்.பாலுவும் உடனடியாக சிஐடி காலனி இல்லத்துக்கு சென்று ராஜாத்தி அம்மாளை நலம் விசாரித்தனர்.

அவர்களை தொடர்ந்து நேற்றிரவு முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று ராஜாத்தி அம்மாளிடம் நலம் விசாரித்தார். ஜெர்மனியில் ராஜாத்தி அம்மாளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்து விவரங்கள் குறித்து ஸ்டாலினிடம் அவரது தங்கை கனிமொழி எடுத்துக் கூறினார். மேலும், தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறும் எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம் எனவும் ராஜாத்தி அம்மாளுக்கு நம்பிக்கையூட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal