அதிமுக அலுவலக சாவி வழக்கில், ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என்று சொல்ல இயலாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பிறகு நீதிபதிகள் 2 முக்கியமான விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், தங்கள் அதிருப்தியையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.
‘‘ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் கிடையாது.. ஒருகட்சியின் இருதரப்பு மோதிக் கொள்கிறார்கள் என்றால் அது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சனை ஆகும். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி அலுவலகத்திற்கு உரிமை கோரமுடியும்?’’ என்று ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்ல, மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அலுவலகத்தின் சாவியை மீட்க, ஓபிஎஸ் தரப்பு சட்ட வழிகளை நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்ததுடன், அலுவலக சாவியை எடப்பாடி தரப்பிற்கு வழங்கியது தவறில்லை என்று குறிப்பிட்டனர்.
இறுதியாக, மீண்டும் சிவில் சூட் போட்டு அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாமே? என்று நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர். இந்த உத்தரவு எடப்பாடி தரப்புக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது. காரணம், இதன்மூலம் அதிமுக பொதுக்குழு ஓபிஎஸ்ஸை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை, நீதிமன்றமே ஏற்றுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதனால், ஒருங்கிணைப்பாளர் பதவி ஓபிஎஸ் வசமில்லை என்றும், அதிமுகவில் அவர் உரிமை கோர முடியாது என்றும் எடப்பாடி தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.. ஆக மொத்தம் இது ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம், ‘‘அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கும் நிலையை உருவாக்கியவர் ஓபிஎஸ்தான். அதிகார துஷ்பிரயோகம் செய்தவரும் ஓபிஎஸ்தான். அதிமுக அலுவலகத்தில் எங்கள் தரப்பிற்கு மட்டுமே முழு உரிமையிருக்கிறது’’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.
இப்படி நேற்றைய தினம் ஒரே நாளில், 2 விதமான பின்னடைவுகள் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்க போகிறது என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது பற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘ இனி கட்சி பிரச்சனையை நேரடியாகவே ஓபிஎஸ் இறங்கி சந்திக்க வேண்டும். இனியும் நீதிமன்றத்தை நம்பியிருக்க கூடாது. தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அன்று தீர்ப்பினால்தான் கட்சியே இன்று முடங்கிபோய்விடும் நிலையில் உள்ளது.. அதனால், இனியும் இந்த மாதிரி அரசியலை, நீதிமன்றத்தில் செய்யாமல் மக்கள் மன்றத்தை ஓபிஎஸ் நடத்த வேண்டும். தன்னுடைய அரசியல் களத்தில் நின்று போராடி வெற்றி பெற வேண்டும். தற்சமயம் அவர்பக்கம் ஓரளவு செல்வாக்கே உள்ள நிலையில், தன்னை எந்த அளவுக்கு நிரூபிக்க போகிறார் என்பது சந்தேகம்தான்.
ஓ.பி.எஸ்.ஸுக்கு இனி ஒரே வழிதான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் அவரால் இணைய முடியாது & அதற்கு வாய்ப்பும் இல்லை. அதே சமயம் சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைந்தாலும் பெரிய செல்வாக்கு இருக்காது. என்றைக்கு ‘அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்’ என்று சசிகலா அறிவித்தாரோ, அன்றே இவர் மீதான நம்பிக்கை குலைந்துவிட்டது. மேலும் சசிகலாவும் ஒன்றுபட்ட அ.தி.மு.கவைத்தான் விரும்புகிறார். ஓ.பி.எஸ்.ஸை மட்டும் அவர் நம்பவில்லை. அதனால்தான் இருவர் சந்திப்பும் தள்ளிக்கொண்டே போகிறது.
இதற்கிடையே, எதிர்காலத்தை முன்கூட்டிய கணித்து, அ.ம.மு.க. என்ற தனிக்கட்சியை தொடங்கிவிட்டார் டி.டி.வி.தினகரன். அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை என்பது, எடப்பாடி வலுவாக இருக்கும்போது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. அதனால், டிடிவி தினகரனின் அமமுகவில் ஓபிஎஸ் + சசிகலா இருவருமே சேர்ந்து பயணிக்கும்போது, அதுவும் டிடிவியை தலைமை பொறுப்பில் அங்கீகரிக்கும்போது, ஓரளவு பலம் கிடைக்கும். எடப்பாடியையும் எதிர்க்க முடியும். சொந்த தொகுதியிலேயே செல்வாக்கை இழந்துள்ளார் ஓபிஎஸ். அந்த மண்டலத்தில் உள்ளவர் பெரும்பாலும், எடப்பாடி பக்கம் உள்ள நிலையில், ஓபிஎஸ், உடனடியாக டிடிவியுடன் இணைவதைத் தவிர வேறுவழியில்லை’’ என்றனர்.
அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!