அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போது தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏ.,வாக உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்திற்கான ஒப்பந்தங்களின்போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.

இதனடிப்படையில், கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னையில் அவர் தொடர்புடைய 10 இடங்கள், கோவையில் தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 9 இடங்கள், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடக்கிறது.

அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தேசிய மருத்துவக் குழு விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சி.விஜயபாஸ்கர் சான்று தந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து சென்னை, சேலம், மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடக்கிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டபோது அவரது வீட்டின் முன் அதிமுக.,வினர் குவிந்தனர். சோதனையின் போது, இடையூறு ஏற்படுத்தியதாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ச்சுணன் , பி.ஆர்.ஜி அருண்குமார் , தாமோதரன் , கந்தசாமி , அமுல்கந்தசாமி , கே.ஆர்.ஜெயராம் , ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal