சென்னையில் காதலன் தனது காதலிக்கு சர்ப்ரைஸாக பிறந்த நாள் பரிசு கொடுக்க வந்திருக்கிறார். அப்போது காதலி வேறொரு ஆண் நண்பருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து, ஆத்திரத்தில் செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரத்தைச் சேர்ந்தவர் ஆஷாராவ்(26). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த மரடோனா(31) என்பவரை காதலித்து வந்தார். நேற்று ஆஷாராவிற்கு பிறந்த நாள் என்பதால் இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு பரிசுப்பொருளுடன் மரடோனா வந்தார். அப்போது வீட்டில் வேறு ஒரு ஆண் நண்பருடன் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மரடோனாவிடம், அவர் தனது நண்பர் என்று ஆஷாராவ் கூறியுள்ளார். ஆனால், அதை அவர் நம்பவில்லை. இதனால் மரடோனாவிற்கும், ஆஷாராவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மரடோனா பால்கனியில் இருந்து ஆஷாவை கீழே பிடித்து தள்ளி விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

இதனால், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆஷாராவை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மரடோனாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal