சமீபத்தில் கொங்கு மண்டலத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் மாபெரும் விழாவை நடத்திக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் மீண்டும் இடம்பிடித்தார் செந்தில் பாலாஜி! இந்த நிலையில்தான் அதே கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த சசிகலா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிகிறது.
இது பற்றி ஓ.பி.எஸ். மற்றும் சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம்.
‘‘சார், கொங்குமண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டைதான் அதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் சசிகலா என்பதை மீண்டும் நினைவு படுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா, முக்குலத்தோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைவிட கொங்குமண்டலத்தில் உள்ளவர்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
இந்த விஷயம் சசிகலாவிற்கு மிக அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். 2011&ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, கொங்குமண்டலத்தில் உள்ளவர்களுக்குத்தான் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதற்குக் காரணமும் சசிகலாதான். அதே சமயம், முக்குலத்தோர் வாக்குகளும் அ.தி.மு.க.வை விட்டுப் போகாமல் பார்த்துக்கொண்டார் சசிகலா.
இந்த நிலையில்தான், 2016 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. பெற்ற வெற்றிதான் மீண்டும் ஜெயலலிதாவை முதலமைச்சராக்கியது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையனை முதல்வராக சசிகலா கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் என்னிடம் ‘விட்டமின் ப’ இல்லை என்றதால், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதோடு, செங்கோட்டையனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக் கல்வித்துறையை கொடுத்தார்.
கொங்கு மண்லத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக உருவாக்கியதே சசிகலாதான். இந்த விஷயம் தெரிந்துதான், சிலர் இன்னும் மறைமுகமாக சசிகலாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்! இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் மாபெரும் ‘ஆபரேஷன்’ ஒன்றை நடத்த சசிகலா திட்டமிட்டிருக்கிறாராம்.
இந்த ‘ஆபரேஷன்’ விஷயத்தை வைத்திலிங்கத்தின் பிறந்தநாளான நேற்று அவர் தனதுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொண்டருக்கிறார். அதாவது, எடப்பாடி தன்னுடைய கோட்டை என்று சொல்லிக்கொண்டிருக்கும் கொங்குமண்டலத்தில் ஏற்கனவே செந்தில்பாலாஜி கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டை போட்டு வருகிறார்.
இதே நிலை நீடித்தால், அங்கும் அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்பதால், விரைவில் கொங்கு மண்டலத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம். இந்த பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் ஒன்றிணைவதோடு, எடப்பாடிக்கு நெருக்கமானவர்களும் இணைய இருக்கிறார்களாம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும்’’ என்றார்கள்!
சசிகலாவின் கொங்கு ஆபரேஷன் சக்சஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!