
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக மாநிலக்கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் முயன்று வரும் நிலையில், பேரணியில் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ள வரவேற்புதான் பி.ஜே.பி.யை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது!
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற நிதீஷ் குமார் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அரசை நடத்தி வந்த நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடந்த ஆண்டு மோதல்களின் காரணமாக கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது.இந்த நிலையில் பீகார் முதலமைச்சராக பதவியேற்ற கையோடு 2024 மக்களவை தேர்தலுக்காக தயாராகி வருகிறார் நிதீஷ் குமார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு தொடங்கி அடுத்தடுத்த சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் 4 பயணமாக டெல்லி சென்றார். நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு தனக்கு ஊக்கம் தருவதாக தெரிவித்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே சரத் பவாரும் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
“எங்கள் முதன்மையான நோக்கம் என்பது நாட்டு நலனுக்காக ஒற்றுமையை கட்டமைப்பதுதான். யார் தலைவர் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். பிரபலமான முகத்தை விட ஒற்றுமையான கூட்டணியே நாட்டுக்கு அவசியம்” என்று நிதீஷ் குமார் கூறியுள்ளார். சரத் பவாருக்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியாவை சந்தித்தார் நிதீஷ் குமார்.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், தேஜஸ்வி யாதவின் மாமாவும் தனது நீண்ட கால அரசியல் நண்பருமான சரத் யாதவையும் சில நாட்களுக்கு முன் சந்தித்தார் நிதீஷ். டெல்லி பயணம் குறித்து பேசிய அவர், “சோனியா காந்தி வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய பிறகு மீண்டும் அங்கு சென்று அவரை சந்திக்க உள்ளேன்.”
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் உறவை முறித்துக் கொண்டதற்காக டெல்லியில் நான் சந்தித்த தலைவர்கள் அனைவரும் எனக்கு நன்றி தெரிவித்தார்கள்.” என்றார். பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்த பிறகு நிதீஷ் குமார் மேற்கொண்ட முதல் டெல்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்தியின் பாதயாத்திரை முடிந்த பிறகு, இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது!
