மாமனார் – மருமகள், மாமியார் – மருமகன் உறவு என்பது மதில்மேல் நடப்பது போன்றது. ஆனால், சில சமயம், இந்த உறவுமுறைகளில் ஏற்படும் சிக்கலே, வன்முறைகளுக்கும், குடும்பம் சிதைவதற்கும் காரணமாகவிடுகிறது.

அந்தவகையில் ஆந்திராவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிராஸ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் செருப்பு கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார். கணவன் இல்லாத, தன்னுடைய மகளின் வளமான வாழ்க்கைக்காக, தன்னந்தனியாகவே பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி உள்ளார்.. சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலா ஜான் என்பவருக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்து ஒருசில ஆண்டுகள் மட்டுமே இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென வேலையை காட்டி உள்ளார் மருமகன். வரதட்சணை பிரச்சனை இவர்களுக்குள் வெடித்துள்ளது.. இதை வைத்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். வரதட்சணை இல்லாமல் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லி அடித்து விரட்டி விட்டுள்ளார்.. இதனால், அந்த பெண்ணும், அம்மா வீட்டிற்கு சென்று நிலைமையை சொல்லி அழுதுள்ளார்.

இதனிடையே, மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகன் கோலா ஜான் , மாமியாரை தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார். பிறகு, மெல்ல மெல்ல மாமியார் வீட்டிலேயே தங்கவும் ஆரம்பித்தார். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல வேண்டும், அதற்காக தங்கியிருக்கிறேன் என்று காரணம் சொல்லி உள்ளார். ஆனால், மருமகனின் புத்தி தடுமாறியது. மாமியார் தனிமையில் இருக்கும்போதெல்லாம், அவருக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.

இதனால் மாமியார் அதிர்ந்துபோனாலும், இதை வெளியில் சொன்னால், மகளின் வாழ்க்கை மேலும் சீரழிந்துவிடும் என்று பயந்துகொண்டு, அனைத்தையும் பொறுத்து சென்றுள்ளார். ஒருகட்டத்தில் மாமியாரை பலாத்காரம் செய்ய முனைந்தார் மருமகன். இதனால் அதிர்ச்சி அடைந்த மாமியார், மருமகனிடமிருந்து தப்பித்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்திருக்கிறார். நேராக போலீசுக்கு சென்று மருமகன் மீது புகாரும் தந்தார்

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வந்ததுடன், கோலா ஜான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.. இது தொடர்பான வழக்கின் விசாரணையும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தற்போது, கோலா ஜான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கோலா ஜானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது செசன்ஸ் நீதிமன்றம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal