சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். 150 நாட்கள் பாதயாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்க உள்ளதையொட்டி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றும் நட்டார்.

ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும், ராகுல் காந்தி தனது தந்தையின் நினைவிடத்தில் 20 நிமிடங்கள் தியானம் மேற்கொண்ட அவர் காங்கிரஸ் கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த ராகுல்காந்தி பின்னர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

‘‘பிரிவினை அரசியலாலும், வெறுப்பாலும் நான் என்னுடைய தந்தையை இழந்தேன். ஆனால் ஒரு போதும் நான் நேசிக்கும் இந்த நாட்டை இழக்க மாட்டேன். வெறுப்பை அன்பால் வெல்லலாம். பயத்தை தன்னம்பிக்கையால் வெல்லலாம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடைகளை வெல்வோம்’’ இவ்வாறு அந்த பதிவில் ராகுல்காந்தி குறிப்பிட்டிருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal