விஞ்ஞானம் விண்ணைத் தொட்டாலும், வடமாநிலங்களில் மூடநம்பிக்கைகள் மனிதனை சில நேரங்களில் மிருகமாக்கிவிடுகிறது.

ராஜஸ்தானில் வினோதமான நடைமுறை ஒன்று பரவி வருகிறது. அங்கு நாடோடிகள் நிறைய பேர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சன்சி நாடோடி என்று பெயர். இவர்கள் சமூகத்தில் கல்யாணம் ஆனதுமே, அந்த புதுமண பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்கின்றனர். இந்த டெஸ்ட்டில் அந்த பெண் வெற்றி பெற வேண்டுமாம். அப்போதுதான் அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் உள்ளார் என்று நம்பப்படும். இப்படிப்பட்ட நடைமுறையை, “குகடி பிரடா” என்று பெயரிட்டுள்ளார்கள். அந்த வகையில், ஒரு இளம்பெண், தற்போது சிக்கி கொண்டுள்ளார். பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 24 வயதாகிறது.

பகோர் நகரில் கடந்த மே 11-ந்தேதி இவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம், தன்னுடைய மாமியார் வீட்டினர் மீது திடீரென போலீசில் புகார் தந்துள்ளார். அந்த புகாரில், “தன்னை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனை செய்தனர் என்றும் அதில் தோல்வி அடைந்ததும் அடித்து விரட்டி, கொடுமைப்படுத்துகின்றனர்” என்றும் தெரிவித்து உள்ளார். இதன் பின்னணி என்னவென்று பார்த்தால், அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி சுபாஷ் நகர் போலீசிலும் ஏற்கனவே புகார் தரப்பட்டுள்ளது..

மணமகள் மீது போலீசில் கேஸ் உள்ளது என்று, மாப்பிள்ளை வீட்டினர் கேள்விப்பட்டுள்ளனர். அதனால், ஆத்திரம் அடைந்தவர்கள், கல்யாணம் ஆன அன்றே, உடனடியாக அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை டெஸ்ட் செய்துள்ளனர். இதில் தோல்வி அடைந்து விட்டால், ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையை மாப்பிள்ளை வீட்டுக்கு தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். கன்னித்தன்மை சோதனையிலும் தோல்வி அடைந்த ஆத்திரத்தில், கணவர், மாமியார் இருவரும் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்துக்கும் சென்றுள்ளது. சமீபத்தில்தான் கோவிலில் இதற்கான பஞ்சாயத்து நடந்துள்ளது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதன்பின்பு அந்த பெண்ணை வீட்டில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர். 10 லட்சம் தர வழியில்லாத நிலையில், கணவன் வீட்டிற்கும் செல்ல முடியாத நிலையில், கடைசியில் இந்த பெண் போலீசுக்கு புகாருடன் வந்துள்ளார். இந்த புகாரின்பேரில், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல், அச்சுறுத்தல், பெண்ணின் நன்மதிப்புகளை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மணமகன் வீட்டார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாயத்து நடந்த அன்று, அந்த பெண்ணை பெற்றோர் வீட்டிற்கே அனுப்பி வைத்துவிட்டுதான், பஞ்சாயத்தை கூட்டி உள்ளனர். அதில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் தர வேண்டுமென மிரட்டியதாக தெரிகிறது. இந்த தகவல்கள் உள்ளூர் பத்திரிகைகளில் செய்தியாக வந்தள்ளது. பிறகு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட அந்த பெண் சொல்லும்போது, “எல்லாருமே கடுமையான கோபத்தில் இருந்ததால், நான் ரொம்ப பயந்து போய் விட்டேன். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, என் பக்கத்து வீட்டுக்காரர் என்னை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். அதுதொடர்பாக போலீசிலும் வழக்கு கொடுத்துள்ளோம். அதைப் பற்றி என் மாமியாரிடம் ரகசியமாக சொன்னேன்..ஆனால், அவர் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல், இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்” என்று அழுதபடியே கூறுகிறார்.

நடந்த சம்பவம் பற்றி போலீஸ் துணை சூப்பிரெண்டு சுரேந்திர குமார் சொல்லும்போது, அந்த பெண்ணின் மாமனார் தலைமை கான்ஸ்டபிளாக இருக்கிறார். சம்பவம் பற்றி அவருக்கு எல்லா விஷயமும் தெரியும்” என்று மட்டும் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு சம்பவம் வடமாநிலம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்துக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கன்னித் தன்மை விவகாரத்தில் ஒரு இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal