நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் டிரைவர் கற்பழிக்க முயற்சித்£த சம்பவம்தான் அதிர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு கோட்டையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் செல்வபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 10 மாதங்களாக தங்கி உள்ளார்.
கடந்த 28-ந்தேதி இவர் வேலை சம்பந்தமாக திருப்பூருக்கு சென்றார். வேலை முடிந்ததும் நள்ளிரவு கோவைக்கு திரும்பினார். இரவு வெகுநேரம் பஸ்சில் செல்ல முடியாது என்பதால் ஹோப் கல்லூரியில் இருந்து செல்வபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக ஆட்டோ புக்கிங் செய்தார். புக்கிங் செய்த சில நிமிடங்களில் ஹோப் கல்லூரி பஸ் நிறுத்தத்துக்கு ஆட்டோ வந்தது. இளம்பெண் அந்த ஆட்டோவில் ஏறினார்.
நள்ளிரவு என்பதால் அவினாசி ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை ஆட்டோவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். இதனையடுத்து ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வேகமாக ஓட்டினார். இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் ஆட்டோவை நிறுத்துமாறு சத்தம் போட்டார்.
ஆனால் இதனை காதில் வாங்கி கொள்ளாத அவர் ஆட்டோவை வேகமாக ஓட்டி அவரை கடத்தி செல்ல முயன்றார். ஆட்டோ அவினாசி ரோட்டில் உள்ள வணிக வளாகம் அருகே வந்த போது ஆட்டோவில் இருந்து இளம்பெண் கீழே குதித்தார். அருகில் போலீஸ் நிலையம் இருந்ததால் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை அங்கேயே விட்டு தப்பிச் சென்றார். கீழே குதித்ததில் இளம்பெண் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இது குறித்து தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இளம்பெண்ணை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் பீளமேடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது கோவை உக்கடம் அருள் நகரை சேர்ந்த முகமது சாதிக் (வயது 43) என்ற ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நள்ளிரவு ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.