நாடு முழுதும் இன்று (ஆக.,31) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டவில்லை. தனி நபர்கள் தங்களின் வீடுகளில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதற்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது தடைகள் நீங்கியுள்ளன. ஹிந்து அமைப்பினர், தங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகளை நிறுவி, ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 சிலைகள் வைக்கப்பட உள்ளன.
பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும் விசர்ஜன விழா அவரவர் விருப்பத்திற்கு இணங்க வருகிற 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா 4ஆம் தேதி நடைபெற உள்ளது. விநாயகர் சிலை வைத்து வழிபடுதலுக்குப் பின்பு அவற்றை பாலவாக்கம், பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய நான்கு கடற்கரைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டுமென சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது!