திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும் தி.நகரைச் சேர்ந்த குமரன் (37), என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெரியோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணமான நாள் முதலே இந்திமதியை அவரது மாமியார் சாந்தி, ராசியில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து 4 மாத கர்ப்பிணியாக இருந்த இந்துமதி மாமியாரின் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், தனது தாயின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கணவர் தன்னை அழைத்துச் செல்ல வராததால் விரக்தியில் இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது அக்காவிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், என் சாவுக்கு குமரன் அம்மாதான் காரணம்; நானும் பாப்பாவும் செல்கிறோம் என்று அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை கேட்டுவிட்டு வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள், அவர் இறந்துவிட்டார். இதையடுத்து தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், உடலை மீட்டு இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் விசாரணை முடிந்து அதன் அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், வரதட்சணை கொடுமை ஏதும் இல்லை. ஆனால், மாமியார் கொடுமை இருப்பது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் சந்தேக மரணத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை மாற்றி, இந்துமதியின் மாமியார் சாந்தியை (60) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.