அ.தி.மு.க. மாஜி மந்திரியின் மருமகன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் 2016-ல் காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் பாஸ்கரன். அவரது மகள் சுமதி, கணவர் சரவணன் குடும்பத்தினர் மதுரை அருகே ஒத்தப்பட்டியில் வசித்து வந்தனர். சரவணன், ஒப்பந்ததாரராக இருந்து வந்தார்.

ஒத்தப்பட்டி வீட்டில் நேற்று காலை சரவணனின் அறை வெகுநேரமாகியும் திறக்கவில்லை. இதனையடுத்து சரவணனின் சகோதரரர் கர்ணனை அழைத்து அறையின் கதவை கடப்பாரையால் உடைத்தனர். அப்போது படுக்கை அறையில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சரவணன் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சரவணன் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சரவணன் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தொழில் முன்விரோதம் காரணமா? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகன் சரவணன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சரவணன் பொறியியல் பட்டதாரி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்தான் மதுரை ஒத்தப்பட்டியில் குடும்பத்துடன் குடியேறினார். சரவணனின் தற்கொலை, ஒத்தப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal