தனது மகனின் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு, மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த மருத்துவர் பத்மநாபன். இவரது மகன் ராபின்சன்(43). சித்த மருத்துவம் படித்துவிட்டு தற்போது மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு 23 வயது இளம்பெண் ஒருவர் தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது, உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பது போல் அந்தப் பெண்ணுக்கு மருத்துவர் ராபின்சன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுதொடர்பாக வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என்று அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை அந்த பெண் தனது குடும்பத்ததாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவர் ராபின்சன்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ராபின்சன் ஏற்கனவே 2015ம் ஆண்டில் ஒரு பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal