பிறந்தநாள் விழா, திருமண விழா மற்றும் பண்டிகை காலங்களில் மது அருந்துவது தற்போது பேஷனாகி வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள், ஆடம்பரமாக செலவு செய்ய ஆசைப்படும் மக்கள் மதுவுக்கும் அதிக பணத்தை செலவு செய்ய தயங்குவதில்லை.

இதனால் வெளிநாட்டு மதுபான நிறுவனங்கள் இந்திய சந்தையை மையப்படுத்தி விற்பனையை பெருக்க திட்டமிட்டு உள்ளன. இந்தியாவில் தற்போது வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை 8.8 சதவீதமாக உள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் இருமடங்காக உயர வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஓட்கா விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதுபோல ஒயின், பீர் போன்றவற்றின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இதற்கு முன்பு நடந்த ஆய்வில் கிடைத்த தகவல்களுக்கும் இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பது தெரியவந்தது. மது அருந்தும் ஆண்கள் குறைவாக குடித்தாலும் தினமும் குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆய்வின்போது மது அருந்தும் ஆண்களின் எண்ணிக்கை 22.37 சதவீதம் குறைந்துள்ளது.

ஆனால் தினமும் மது அருந்துவோர் எண்ணிக்கை 24.19 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இது கவலை அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆய்வு முடிவுகள் அதற்கு எதிராகவே உள்ளது. அதன்படி கடந்த ஆய்வை விட இப்போது நடந்த ஆய்வில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 39 சதவீதம் குறைந்துள்ளது. இதுபோல வாரத்திற்கு ஒரு முறை மது அருந்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இது 7.24 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இந்திய பெண்களில் தற்போது நாட்டு சரக்கு பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இதனை தெரிவித்த ஆய்வாளர்கள், இந்தியாவில் மது அருந்துவோர் குறைவாக குடித்தாலும் அவர்கள் அடிக்கடி மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமை ஆனவர்களாக இருப்பதாக கூறியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal