எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இருந்து இம்மியளவும் பின்வாங்குவதாக தெரிவில்லை. இந்த விவகாரம்தான் மேலிட பா.ஜ.க.வை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது.

அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்கும்… எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தின் பின்னணி என்ன? என்று தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘அதிமுக விவகாரம், இன்னமும் அதே பரபரப்பு அடங்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட சிக்கல்கள் கூடிவிட்ட நிலையிலும்கூட, ஒற்றை தலைமை விவகாரத்தை விட்டுத்தராமல் உள்ளார். நேற்றுமுன்தினம்கூட, அதிமுகவில் ஒற்றை தலைமை வழக்கு விசாரணைக்கு வந்தது.. இரு தரப்பிலுமே காட்டமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது கூட நீதிமன்றத்தில், ‘ஓ.பி.எஸ். கூட இணைந்து பணியாற்றும் வாய்ப்பே இல்லை’ என்று நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு அடித்துக் கூறிவிட்டது.

ஓ.பி.எஸ்.ஸுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டும், எடப்பாடி பழனிசாமி தன் பிடிவாதத்தில் உறுதியாக உள்ளார். இது ரத்தத்தின் ரத்தங்களுக்கு மட்டுமல்லாமல், மேலிட பாஜகவுக்கே கொஞ்சம் ஷாக் தானாம். ஓபிஎஸ்ஸை, எடப்பாடி பழனிசாமி அரவணைத்து செல்லாமல் இருக்கிறார் என்பதே, பாஜகவுக்கு எதிரான செயலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சசிகலா, தினகரன் இருவரையும் சேர்த்து கொள்ள எத்தனையோ முறை டெல்லி வலியுறுத்தியும், அதற்கு எடப்பாடி செவிசாய்க்கவில்லை. இதுவே பாஜகவுக்கு அதிர்ச்சிதான். இப்போது ஓபிஎஸ் எதிர்ப்பது என்பதும், பாஜகவை மறைமுகமாக எதிர்ப்பதாகவ கருதப்படுகிறது.

இதற்கிடையே ரெய்டுகள், விசாரணைகள் என எடப்பாடிக்கு விழிபிதுங்கி வருகிறது. மற்றொரு பக்கம் கொடநாடு விவகாரம், 4800 கோடி ரூபாய் சம்மந்திக்கு டெண்டர் கொடுக்கப்பட்ட வழக்கு என அவ்வளவும் எடப்பாடியை துரத்த ஆரம்பித்துவிட்டது. தன்னை சுற்றி இத்தனை நெருக்கடிகள் இருந்தும், பொதுக்குழு தொடர்பான சட்டசிக்கல்கள் இருந்தும், ஓபிஎஸ்ஸின் தரப்பில் குடைச்சல்கள் இருந்தும், டெல்லியின் பாராமுகம் இருந்தும், கோர்ட் உத்தரவுகளில் அடுத்தடுத்த பின்னடைவுகள் இருந்தும், எடப்பாடி தன் பிடிவாதத்தில் கெத்தாக நிற்கிறார்.

இதற்கு காரணம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, பி.ஜே.பி., ஓ.பி.எஸ். தி.மு.க., சசிகலா, டி.டி.வி. என அத்தனை பேர் கொடுத்த நெருக்கடியையும் சமாளித்து, கடைகால கட்டங்களில் மக்கள் பிரச்னைகளையும் லாவகமாக கையாண்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை செய்து காட்டி வந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில்தான், தற்போது தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் மட்டுமின்றி கட்சியினரும் கொஞ்சம் கோபத்தில்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி ஒரு ‘தில்’ முடிவை எடுத்திருக்கிறார். அதாவது, ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா ஆகியோர் இணைந்தாலும், தான் தனியாக இருந்தாலும் ஓட்டுமொத்த அ.தி.மு-க.வினரும் தன்பக்கம்தான் இருக்கிறார்கள்.

ஓ-.பன்னீர்செல்வத்தை நம்பி சென்று, ‘வேறுவிஷயத்தை’ இன்னமும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், ஓ.பி.எஸ். யாருக்கும் எதையும் கொடுக்கமாட்டார் என்பது எடப்பாடிக்கு நன்றாகத் தெரியும். இதே நிலை நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சின்னமும், கொடியும் முடக்கினாலும், ‘சேவல் சின்னத்தில்’ நின்று கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் நிச்சயம் 20&க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார்.

எனவே, எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தமட்டில், மிரட்டி பணிய வைக்க முடியாது. அவர், எல்லாவற்றிற்கும் தயாராகிவிட்டார்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal