ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே எனக்கு போதும்’ என்றார்.

ஈரோட்டில் 64 ஆயிரம் பயனாளிகளுக்கு, ரூ.167.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம். பல்வேறு மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றன. இந்தியாவுக்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்துகிறோம்.

யாரோ ஒருசில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி. நாட்டிலேயே தனிநபர் வருமானம் தமிழகத்தில் தான் அதிகம். முதல்வராக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக இருந்து செயல்பட்டு வருகிறேன். மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமில்லாமல் மண்ணையும் காக்கக் கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. நெல் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது. என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே எனக்கு போதும்.இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal