காங்கிரஸ் வளர்ச்சி குறித்து கடிதம் எழுதிய 23 தலைவர்கள் மீது கட்சியின் ஜால்ராக்கள், துதிபாடிகள் அவமானப்படுத்தினர் என அக்கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான கடிதத்தை கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளதாவது: கடந்த 2013 ல் காங்கிரசின் துணைத்தலைவரான பின்பு, கட்சியின் கலந்தாலோசனை முறையை ராகுல் முற்றிலும் அழித்துவிட்டார். அவரின் குழந்தைத்தனமான நடவடிக்கைளே கடந்த 2014 தேர்தல் தோல்விக்கு காரணம். கடந்த 2014ல் ராகுல் தலைவரான பின்பு, நடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. 2014 முதல் 2022 வரை நடந்த 49 சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் 39 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. 4 தேர்தல்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 6 மாநிலங்களில் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்கிறது. 2 மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது.

2019 தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சியின் நிலைமை இன்னும் மோசமடைந்தது. அவசர கதியிலும், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தாமலும் ராகுல் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், இடைக்கால தலைவராக நீங்கள் பொறுப்பேற்றீர்கள். அந்த பதவியில் 3 ஆண்டுகளாக தொடர்கிறீர்கள். ஐக்கிய முற்றுபோக்கு கூட்டணி அரசின், ஒருமைப்பாட்டை சீர்குழைத்த ரிமோட் கன்ட்ரோல் முறை காங்கிரஸ் கட்சிக்கும் வந்துவிட்டது. நீங்கள் பெயரளவிலான தலைவராக மட்டுமே இருப்பதால், அனைத்து முக்கியமான முடிவுகளையும் ராகுல் அல்லது அதனை விட மோசமாக அவரது பாதுகாவலர்கள் அல்லது தனிச்செயலாளர்கள் எடுக்கின்றனர்.

கட்சியில் மறுசீரமைக்க உங்களுக்கு கடிதம் எழுதிய முன்னாள் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீது உங்களின் துதிபாடிகள்,ஜால்ராக்கள் எங்களை தாக்கியதுடன், கொச்சையான முறையில் இழிவுபடுத்தி அவமானப்படுத்தினர். காங்கிரஸ் மேலிடத்தின் ஆதரவுடன் செயல்படும் இந்த துதிபாடிகள், ஜால்ராக்கள் ஆகியோர் காஷ்மீரில் எனக்கு போலியான இறுதி ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஒழுங்கீனத்தை செய்தவர்கள் டில்லி சென்று கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் ராகுலை சந்தித்து மரியாதை செலுத்தினர். இதே கும்பல் கபில் சிபல் வீட்டையும் தாக்கியது. அவர் தான், உங்களுக்காகவும், உங்களின் குடும்பத்திற்காகவும் நீதிமன்றத்தில் வாதாடினார். கட்சியின் நிலை கவலை தெரிவித்து உங்களுக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் செய்த ஒரே குற்றம் கட்சியின் பலவீனத்திற்கான காரணத்தையும், அதனை சரி செய்வதற்கான வழிகளையும் எடுத்துக்கூறியது தான்.துரதிர்ஷ்டவசமாக, இந்த கருத்துகளை ஆக்கப்பூர்வமானதாக எடுத்து கொள்ளாமல், சிறப்பு செயற்குழு கூட்டத்தில் எங்கள் மீது வசைபாடியதுடன், அவமானப்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டோம்.

துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை திரும்பி வரமுடியாத நிலையை எட்டியுள்ளது. இப்போது கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்ற பினாமிகள் முட்டுக் கொடுக்கப்படுகிறார்கள். இந்தச் சோதனை முயற்சியும் தோல்வியடையும், ஏனென்றால் கட்சி மிகவும் முழுமையாக அழிக்கப்பட்டதால், நிலைமையை மீளமுடியாது. தேர்ந்தெடுக்கப்படுவர், உங்களின் அசைவிற்கு ஏற்ப நடனமாடுவார். காங்கிரஸ் கட்சியில் ராகுல் மேற்கொண்ட அத்தனை சோதனை முயற்சிகளும் படு தோல்வி அடைந்துவிட்டன. இதில் இருந்து மீள முடியாத நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுவிட்டது. தேசிய அளவிலான அரசியல் இடத்தை பா.ஜ.,விற்கும் மாநில அளவிலான இடத்தை பிராந்திய கட்சிகளுக்கும் விட்டு கொடுத்துவிட்டோம். இதற்கு எல்லாவற்றுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக தலைமையே காரணம்.பொறுப்புணர்வற்ற தலைமையால் காங்கிரஸ் கட்சி இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் கேலிக்கூத்தானது மற்றும் ஏமாற்றுவேலை. எந்த இடத்திலும், எந்த மட்டத்திலும் தேர்தல் நடத்தவில்லை. காங்கிரஸ் மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தயாரித்த பட்டியலில் கையெழுத்து போட தேர்தல் நடத்துபவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். பூத் அளவில், மாவட்ட , மாநில அளவில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. வேட்புமனுக்கள் பெறப்படவில்லை. பரிசீலனை செய்யப்படவில்லை. தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த வகையில் கட்சியில் நடக்கும் மிகப்பெரிய மோசடிக்கு கட்சியின் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் மோசமான நிலைக்கு வருவதற்கா முன்பிருந்த தலைவர்கள் பாடுபட்டார்கள்? இதனை இன்றைய காங்கிரஸ் தலைமை எண்ணிப்பார்க்க வேண்டும். இச்சூழ்நிலையில் மிகுந்த மனவேதனையுடன் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal