‘காய்த்த மரமே கல்லடி படும்…’ என்பார்கள் அந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ… இல்லையோ… பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பொருந்தும்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சரவைப் பட்டியலில், பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷுக்கு ஒதுக்கப்பட்டதை பார்த்து பல சீனியர்களே வாயடைத்துப் போனார்கள். காரணம், பள்ளிக் கல்வி, பொதுப்பணித்துறை, மின்சாரம், போக்குவரத்து போன்ற துறைகளை சீனியர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மிகவும் சவாலான பள்ளிக் கல்வி, மின்சாரம், பொதுப்பணித்துறை ஆகியவற்றை மிகவும் திறமையாக கையாள வேண்டும் என்பதால், அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, எ.வ.வேலு உள்ளிட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இவர்கள் மீதான ஆளுந்தரப்பைச் சேர்ந்தவர்களே, தங்களுக்குத் தெரிந்த வகையில் ஆரம்ப கட்டத்திலேயே குற்றச்சாட்டக்களை அள்ளி வீசினர். தற்போது, அன்பில் மகேஷுக்கு எதிராகவும் காய்நகர்த்தி வருகின்றனர்.

குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் சிலரிடம் பேசினோம்.

‘‘எடுத்த எடுப்பிலேயே… சார், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஐந்தாண்டுகளில் என்.ஆர்.சிவபதி, கே.சி.வீரமணி, கே.ஏ.செங்கோட்டையன் என ஐந்து பேர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களாக பணியாற்றினார்கள். அப்போது பள்ளிக் கல்வித்துறையில் இட மாறுதலுக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை கொடுத்தனர். இது தொடர்பாக ஒரு பள்ளி முதல்வரும், புரோக்கர் ஒருவரும் பேசிய ஆடியோ வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தளவிற்கு வளம் கொழிக்கும் துறை. அப்படிப்பட்ட துறையை அ.தி.மு.க.வினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு ஒரு பைசா கூட வாங்கவில்லை என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். எல்லாமே கவுன்சிலிங் வாயிலாக இடமாறுதலை பெற்றனர். அதே சமயத்தில் எதிர்பாராத விதமாக கள்ளக்குறிச்சி சம்பவம் நிகழ்ந்தது, ஆளுந்த தரப்பிற்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் முடிச்சுப் போட முடியாது.

காரணம், ஒவ்வொரு தனியார் பள்ளியையும் அமைச்சர் தன்னுடைய நேரடிப் பார்வையில் வைத்துக்கொள்வது என்பது இயலாத காரியம். அந்தந்த பள்ளிகளின் தாளாளர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள்தான் கண்காணிக்க முடியும்.

இந்த நிலையில்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது. மாணவர்களின் எதிர்காலம் பள்ளிக் கல்வித்துறையில் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே சமயம், பள்ளிக் கல்வித்துறையில் அரசியலை புகுத்துவதுதான் வருத்தமளிக்கிறது’’ என்றனர்.

பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் உள்ள சில நேர்மையான அதிகாரிகளிடம் பேசினோம்.

‘‘சார், அமைச்சரைப் பொறுத்தளவிற்கு பள்ளிக் கல்வித்துறை நேர்மையாக செயல்படவேண்டும் என்று நினைக்கிறார். கடந்த காலங்களில் பலர் புரோக்கர்களாக பணியாற்றி பணம் சம்பாத்தித்தனர். தற்போதும் அதே போல் சம்பாதிக்கலாம் என எதிர்பார்த்தனர். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.

எல்லாமே முறைப்படி நடக்க வேண்டும் என்பதில் அமைச்சர் தெளிவாக இருக்கிறார். இது இங்குள்ள சிலருக்கு பிடிக்காததால்தான், இங்கு நடக்கும் விஷயங்களை அப்படியே மாற்றி வெளியில் கசியவிடுகின்றனர். மற்ற படி பள்ளிக் கல்வித்துறை கடந்த காலங்களை விட தற்போது சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறது’’ என்று அடித்துக் கூறினர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக நடக்கும் சதிவலைகளை தகர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal