தமிழகம் முழுவதும் தி.மு.க. உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளராக அசோக் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவரது குடும்பம் வாழையடி, வாழையாக தி.மு.க. பாரம்பரியத்தைச் சேர்ந்தது.

உப்பிலியபுரம் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க மேலிடம் முடிவு செய்தபோது, ஒரு தரப்பினர் மாவட்டச் செயலாளர் மூலமாக முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் உப்பிலியபுரம் ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டதால், தி.மு.க.விலும் இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அதன் பிறகு ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க ஒத்துக்கொண்ட எதிர்தரப்பு, டம்மியாக ஒன்றிய செயலாளர் ஒருவரை நியமிக்க முடிவு செய்தது. மாட்டச் செயலாளரும் இதற்கு ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

இந்த தகவல் மாவட்ட அமைச்சர் கே.என்.நேருவுக்கு தெரியவர, உப்பிலியபுரம் வடக்கிற்கு நல்ல திறமையான ஒரு நபரை நியமிக்கவேண்டும் என்று சொல்ல, அதற்கு பச்சபெருமாள் பட்டியைச் சேர்ந்த அர.நடராசன் மகன் என்.அசோக்கை கை காட்டியிருக்கிறார்கள்.

எதிர்தரப்பினரின் சூழ்ச்சிகளை முறியடித்து எப்படி தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆனார் என்.அசோக் என்று உப்பிலியபுரத்தில் இருக்கும் மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அசோக்கின் தந்தை உப்பிலியபுரத்தின் முன்னாள் சேர்மன், தற்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு சேர்மனாக இருந்தபோதே, அர.நடராசன் சேர்மனாக இருந்து பல நலத்திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தவர். தந்தையைப் போலவே, அசோக்கும் காசு, பணத்திற்கு ஆசைப்படமாட்டார். பரம்பரை பரம்பரையாகவே கட்சி நிர்வாகிகளுக்கு செலவு செய்த குடும்பம். இந்தப் பதவியை வைத்துக்கொண்டு சம்பாதிக்க வேண்டும் என்பது கிடையாது. எனவே, பல்வேறு தடைகளை தகர்த்து உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவியேற்றிருக்கிறார் என்.அசோக். இனி எங்களது எண்ணவோட்டங்களை அறிந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு பிறந்திருக்கிறது.

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி, ‘உப்பிலியபுரத்தை உப்பில்லாத ஊர்’ என்பார். அந்தளவிற்கு அ.தி.மு.க.வின் கோட்டை உப்பிலியபுரம். இனி திமுகவின் கோட்டையாக மாற்றுவதற்கு, அண்ணன் அசோக் வழியில் எங்களது பயணம் தொடரும்’’ என்றனர்!

ஒவ்வொரு ஒன்றியச் செயலாளரும் இப்படி இருந்தால், திமுகவை அசைத்துப் பார்க்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal