அதிமுகவுக்கு எதிராக பல பிரச்னைகளை செய்து, கட்சிக்கு விரோதமாக அநாகரிகமாக செயல்பட்டால் எப்படி இணைந்து செயல்பட முடியும் எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ்சின் அழைப்பை புறக்கணித்தார்.

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தத எடப்பாடி பழனிசாமி, ‘‘கிராமத்தில் இருந்து நகரம் வரை அதிமுக பிரதான கட்சியாக திகழ்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுக என்ற அற்புதமான இயக்கத்தை தோற்றுவித்துள்ளனர். இந்த இயக்கத்தை சிலர் தன்வசம் கொண்டுபோக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக பிரிந்த நிலையில், ஓபிஎஸ்.ஸும் நானும் ஒன்றாக சேர்ந்தோம்.

அவர் இணைந்தபோது பொதுச்செயலாளருக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கட்சி விதிகளை இயற்றவோ, மாற்றவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதன்படி, பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானது. 2,663 பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தேர்தலில் நின்று வெற்றிப்பெற்றவர்கள். பொது உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.

ஜூன் 23ல் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என ஓபிஎஸ்.ஸும் நானும் இணைந்து அழைப்பு விடுத்தோம். அதில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை விடுத்தினர். அதன் அடிப்படையில் ஓபிஎஸ்ஸிடம் 15 நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே போலீசுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்காமல் கட்சி பொதுக்குழுவுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளரே வழக்கு போடுகிறார். இது எந்த அளவிற்கு நியாயம்? ஓபிஎஸ் தரப்பினர்கள் எதிரிகள் அல்ல, பிரிந்து நிற்கின்றவர்கள்.

ஓபிஎஸ்க்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதற்காக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஓபிஎஸ்ஸுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பதவி வேண்டும் என்பதற்காக அடிக்கடி அழைப்பு விடுப்பது வாடிக்கை. அவரிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை. அவர் பதவி வேண்டும் எனில் தர்மயுத்தம் நடத்துவார். பிறகு அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுப்பார். பதவி கிடைப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார். சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர், அவருக்கே அழைப்பு விடுப்பது சரியா?

பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்து, அவருக்கான இருக்கை போடப்பட்டும் அதில் பங்கேற்காமல், நீதிமன்றத்தை நாடுகிறார், கட்சியின் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார். ஆவணங்களை திருடி சென்றுள்ளனர். இப்படி கட்சிக்கு விரோதமாக அநாகரிகமாக செயல்பட்டால் எப்படி இணைந்து செயல்பட முடியும்? அவரால் தான் அதிமுக ஆட்சி பறிபோனது. முதல்வர் வேட்பாளர் தேர்வின் போதும், எதிர்க்கட்சி தலைவர் தேர்வின் போதும், ஒற்றை தலைமை விவகாரத்தின் போதும் என ஒவ்வொரு முறையும் அவர் பிரச்னை செய்தார்.

நான் இல்லையென்றாலும், வேறு யாராவது கட்சி பதவியில் இருப்பர். ஆனால் கட்சியின் விதிகளை மதிக்க வேண்டும். எனக்கு எந்த பதவியின் மேலும் ஆசையில்லை. படிப்படியாக முன்னறியவன் நான். திமுகவுடன் பன்னீர்செல்வம் தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதை அதிமுகவினர் எப்படி ஏற்பார்கள்? கட்சிக்கு சோதனை வந்தபோதெல்லாம் நாங்கள் தான் முன்நின்றோம், ஓபிஎஸ் நிற்கவில்லை. ஜெயலலிதாவுக்கு உண்மையான விசுவாசிகளாக இருந்தவர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். ஜூன் 23, ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுக்கள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் கூட்டப்பட்டது.

நீதிபதி அவரது கருத்தை கூறியுள்ளார். நாங்கள் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம். போடியில் 1989 ஜெயலலிதா வேட்பாளராக நின்றிருந்தபோது, அவரை எதிர்த்த வேட்பாளருக்காக பிரசாரம் செய்தவர் ஓபிஎஸ். தொண்டர்களிடம் செல்வாக்கு உள்ளது எனில் பொதுக்குழுவில் நிரூபித்திருக்க வேண்டியது தானே!’’இவ்வாறு அவர் கூறினார்.

‘என் வழி தனி வழி…’ என இ.பி.எஸ். எடுத்திருக்கும் முடிவு சாதிக்குமா? சறுக்குமா?- என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal