தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள் மூலம் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். பல பேர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி விடுவதால் கடன் வாங்கி விளையாடும் அளவுக்கு சென்று விடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் பணத்தை இழந்து மன விரக்தியில் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்கின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் சட்டத்தில் போதிய ஷரத்துகள் இல்லை என்று கூறி சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இப்போதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலுவான சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் அதை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவையும் அமைத்திருந்தார். அந்த குழுவும் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்து விட்டது. அதோடு பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் அரசு கருத்து கேட்டது. ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு பிரதிநிதிகளும் இதில் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட உள்ளதாக தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal