தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு இந்தாண்டு கூடுதல் சீட் ஒதுக்கப்படாததால், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 612 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2022-&23-ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு 92 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றில் 48 ஆயிரத்துக்கு அதிகமான இடங்கள் அரசு கல்லூரிகளிலும், 44 ஆயிரம் இடங்கள் தனியார் கல்லூரியிலும் உள்ளன.
தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதன்மூலம் 5,225 மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கிறது. வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழ்நாட்டில் தான் அரசு மருத்துவக்கல்லூரியில் அதிக இடங்கள் உள்ளன. 32 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 5,500 சீட்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் 72 கல்லூரிகளில் சேர்த்து மொத்தம் 10,725 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்தியாவில் அதிக எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்று தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டது. மேலும் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 50 இடங்கள் உயர்த்தப்பட்டது. ஆனால் 2022-23 ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். படிப்புக்கு புதிய சீட் உருவாக்கப்படவில்லை.
மேலும் மருத்துவக்கல்லூரி இயக்குனரகத்தில் புதிய கல்லூரியும் தொடங்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.