இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டது.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் 6 வருடங்களுக்கு பிறகு தேசிய கொடி மேயரால் ஏற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் கடைசியாக 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் மேயராக இருந்த சைதை துரைசாமி கொடியேற்றினார். பின்னர் மேயர், துணை மேயர் பதவிகளுக்கு தேர்தல் நடக்காத காரணத்தால் 6 வருடங்களாக கொடியேற்றம் நடைபெறவில்லை. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, ஆர்.பிரியா மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், சுதந்திர தின விழா சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மேயர் பிரியா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மூவண்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார். பின்னர், தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களால் “விரயத்திலிருந்து பெரும் வியப்பு”என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட கண்காட்சி, கண்கவரும் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

அதிக சொத்துவரி செலுத்திய, முறையாக உரிய காலக்கெடுவிற்குள் சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களை பாராட்டிக் கடிதங்களை வழங்கினார். மேலும், முன்மாதிரியாக சிறப்பாக பணியாற்றிய 81 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal