இந்தியாவில் இரு தேசியக் கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தொழில்துறையில் கோலோச்சி வருபவர்கள் அம்பானி குழுமமும், அதானி குழுமமும்தான். இந்த நிலையில் அம்பானி குடும்பத்திற்கு தொடர் கொலைமிரட்டல் வந்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனைக்கு மூன்றுக்கும் மேற்பட்ட முறையில் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த 18 மாதங்களில் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு மிரட்டல் அழைப்பு வருவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2020ஆம் ஆண்டில் ஜெலட்டின் குச்சிகள் கொண்ட ஒரு மிரட்டல் குறிப்பு வந்தது என்பதும் இதனை அடுத்து அம்பானி வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த சில வெடிகுண்டு பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் அந்த வெடிகுண்டுகள் தீவிரமாக வெடிக்கும் தன்மை கொண்டது அல்ல என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்தவர் அப்சல் என்பவர் தான் என கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்ட லேண்ட்லைன் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்த போலீசார் இதனை அடுத்து அந்த அழைப்பை விடுத்தவர் அப்சல் என கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் கூறப்படுகிறது.

நேற்று (15&08&2022) காலை 10.30 மணிக்கு முதல் மிரட்டல் அழைப்பு கிர்கான் என்ற பகுதியில் உள்ள லேண்ட்லைன் தொலைபேசி எண்ணிலிருந்து ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு வந்ததாகவும் அதனை அடுத்து இரண்டு முறை மீண்டும் மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அப்சலிடம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal