கடந்த சில மாதங்களுக்கு முன்பே பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் தி-முகவில் இணையப்போவதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன. இந்த நிலையில்தான், அவர் தி.மு.க.வில் இணைவது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், மதுரை மாவட்ட பா.ஜ.க, தலைவர் சரவணன், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நேற்று (ஆக.,14) மதுரையில் நடந்த ராணுவ வீரர் இறுதி அஞ்சலியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க,வினர் செருப்பை வீசினர். இந்த சம்பவத்தை அடுத்து டாக்டர் சரவணன் அமைச்சரை அவரது வீட்டில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இது பா.ஜ.க,வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சரவணன் பா.ஜ.க,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal