சென்னையில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மட்டுமல்லாது காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அரும்பாக்கம் ரசாக் கார்டன் ரோட்டில் உள்ள பெடரல் வங்கி என்ற தனியார் வங்கியில் நேற்று பட்டப்பகலில் கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களையும் அவர்களிடம் சிக்கிய ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகளை மீட்கவும் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்கள்.

கொள்ளையர்கள் முகம் தெரியாதவர்கள் அல்ல. இதே வங்கியில் வில்லிவாக்கம் கிளையில் வேலை பார்க்கும் முருகன் என்ற ஊழியர் தலைமையில்தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கொள்ளைக் கும்பலின் தலைவன் அடையாளம் தெரிந்து விட்டதால் அவனை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் வலை விரித்துள்ளார்கள். முருகன் பாடியைச் சேர்ந்தவர். எனவே தனிப்படை போலீசார் முருகனின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்கள். அங்கு முருகன் இல்லை.

நேற்று முருகன் வீட்டில் இருந்து எப்போது வெளியே சென்றார்? மாலையில் வீட்டுக்கு வந்தாரா? யாரேனும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்களா? என்று விசாரித்தனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் கிடைத்த தகவல்களின் படி போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி இருக்கிறார்கள். அப்போது உறவினர் பாலாஜி என்பவருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து பாலாஜியை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர் கொடுத்த தகவல் படி போலீஸ் தனிப்படை ஒன்று திருவண்ணாமலைக்கும் விரைந்துள்ளது. இதுவரை 6 பேரை போலீசார் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்கள். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசாருக்கு சில ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே கொள்ளைக் கும்பல் விரைவில் பிடிபட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளை நடந்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகே போலீசுக்கு தெரியவந்தது. கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்தது எப்படி என்று விசாரித்த போது, பணியில் இருந்த காவலாளி சரவணன் என்பவருக்கு முருகன் குளிர்பானம் வாங்கி கொடுத்ததாகவும் அதை குடித்ததும் அவர் மயங்கி விட்டதாகவும் அதன் பிறகே கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியதாகவும் கூறப்பட்டது. காவலாளி சரவணனுக்கு முருகன் திடீரென்று குளிர்பானம் வாங்கி கொடுத்தது எப்படி? கொள்ளையடிக்க வந்தபோது வங்கியில் வாடிக்கையாளர் யாரும் இல்லை என்ற தகவல் முருகனுக்கு எப்படி தெரிய வந்தது.

இது தொடர்பாக ஏற்கனவே காவலாளியிடம் பேசி தெரிந்து கொண்டார்களா? அல்லது காவலாளியும் உடந்தையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal