திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டை மோசடியாக விற்கு லட்சங்களை குவித்த அதிகாரி ஒருவரை கைது செய்திருக்கும் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளராக இருப்பவர் மல்லிகார்ஜுன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் உள்ள பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். அப்போது தரிசன டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தது.
இதையடுத்து மல்லிகார்ஜுன் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்து தர்ம பிரச்சார பரஷத் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் தரிசன டிக்கெட், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மூலம் சிபாரிசு கடிதம் பெற்று வரும் வி.ஐ.பி பிரேக் தரிசனம், மற்றும் சேவா டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. 324 ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட், 361 வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட், 11 கல்யாண உற்சவம் டிக்கெட் மற்றும் சுப்ரபாத சேவை டிக்கெட் அறை வாடகை உள்ளிட்டவை மூலம் ரூ.3 லட்சம் அவரது போன் பேவிற்கு ஆன்லைன் மூலம் வந்ததை தேவஸ்தான அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து திருமலை 2 டவுன் போலீசில் தேவஸ்தான அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில் மல்லிகார்ஜுன் புரோக்கர்களை வைத்து டிக்கெட்டுகளை கூடுதல்விலைக்கு விற்றது தெரியவந்தது. புரோக்கர்களாக செயல்பட்ட திருப்பதியை சேர்ந்த விஜயகுமாரி, நவ்யஸ்ரீ, வம்சி கிருஷ்ணா, வெங்கட் முரளி கிருஷ்ணா, கணேஷ், வெங்கட சுப்பாராவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த மல்லிகார்ஜுனை போலீசார் கைது செய்து திருப்பதிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே அவர் மேலும் எவ்வளவு பேருக்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தார். அதன் மூலம் எவ்வளவு பணம் ஈட்டினார். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தேவஸ்தான ஊழியர்கள் யார் யார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தேவஸ்தான கண்காணிப்பாளர் ஒருவரே தரிசன டிக்கெட்களை அதிக விலைக்கு விற்று கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.