பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்றும் மீண்டும் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடுகையில்,

‘‘அதிமுக கட்சி விதிகளின்படியே பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். 5 ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டதால் கூட்டப்பட்ட பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் அவகாசம் தேவையில்லை. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி காலாவதியாகவில்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலாவதியாகிவிட்டது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்திற்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை எனக்கூற முடியாது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவின் போது அறிவிக்கப்பட்டது. பொதுக்குழு தொடர்பான நோட்டீசை தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என அவசியமில்லை. 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர்.

ஒற்றைத்தலைமை தான் தேவை என ஜூன் 23 ம் தேதி நடந்த பொதுக்குழுவில் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவு காரணமாக அன்று அதை நிறைவேற்ற முடியவில்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் 2021 டிசம்பரில் பதவிகள் காலாவதியாகிவிட்டன. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் திருத்த விதிகளின்படி நடத்தப்பட்டது. பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிறகு, கட்சியை வழி நடத்த எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர். அதிமுகவில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒராண்டுக்கு முன்னரே காலாவதியானது எப்படி? பெரும்பான்மை உறுப்பினர்கள் பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனரா?’’ என கேள்வி எழுப்பினார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமாக தங்கள் வாதங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணை மற்றும் நீதிபதி எழுப்பிய கேள்விகளைப் பார்க்கும்போது, ஓ.பி.எஸ்.ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! எழுத்துப் பூர்வமாக அளிக்கும் வாதங்களை வைத்து நீதிபதி முடிவெடுப்பார் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal