தியாகிகளின் மனைவிக்குப் பிறகு அவர்களின் அடுத்தப்படியாக உள்ள சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியாவின் 75 – ஆம் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டா உள்ளோம். இந்நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடு பாடுப்பட்டு உழைத்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்.

இந்திய விடுதலைக்காக போராடி சிறை சென்ற சுதந்திர போராட்ட தியாகிகளை மத்திய, மாநில அரசுகள் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு ஓய்வூதியம் அளித்து வந்தது. தற்பொழுது சுதந்திர போராட்ட தியாகிகள் பெரும்பாலானோர் வயது முதிர்வு காரணமாக காலமாகிவிட்டனர். அவர்கள் மறைவிற்கு பிறகு அவரின் நேரடி வாரிசுகளான மனைவிக்கு அவரது ஓய்வூதியத்தில் பாதி குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்களிலும் தற்பொழுது பலர் காலமாகிவிட்டனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அந்தந் மாவட்டங்களில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் அழைப்பு விடுத்து, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் , அரசு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்வது காலகாலமாக கடைப்பிடித்து வரும் மரபு. அது இன்றும் தொடர்கிறது .

நாட்டின் சுதந்திரத்திற்காக தனது சொத்து சுகங்களை இழந்து, தன்னலம் மறந்து பொது நலத்தோடு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. அவர்கள் என்றும் போற்றப்படக் கூடியவர்கள். இந்நிலையில் தியாகிகளின் மனைவிக்குப் பிறகு அவர்களின் அடுத்தப்படியாக உள்ள சந்ததியரை வாரிசுகளாக அங்கரித்து அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று வாரிசுதார்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
மாநில அரசு ஏற்கனவே இருக்கின்ற விதிமுறைகளை தளர்த்தி , உரிய பரிசீலனை செய்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal