காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ‘நீ இல்லாத உலகத்தில் வாழ பிடிக்கவில்லை…’ என காதலன் தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்தான் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவருக்கு மனைவி சரஸ்வதி(47). இவர்களது மகன் உதயசங்கர்(20) மகள் சுதா (22). மகள் சுதா நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் மஞ்சங்குளத்தைச் சேர்ந்த தனது தாய் மாமன் பெரியசாமியின் மகன் சுப்பையா(24) என்பவரை மாணவி சுதா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், சுப்பையா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மகன் இருப்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுப்பையா உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து சுப்பையாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நாங்குநேரிக்குக் கொண்டு வரப்பட்டது . இதனால் சுதாவின் பெற்றோர் துக்க வீட்டிற்கு சென்றுள்ளனர். காதலன் உயிரிழந்த துக்கத்தில் இருந்து மீள முடியாத சுதா வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், மாலை சுமார் 3 மணி அளவில் சுப்பையாவின் இறுதி சடங்கு முடிந்து வீட்டுக்கு வந்த தாய் சரஸ்வதி வீட்டில் கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பது கண்டு சந்தேகம் அடைந்தார். பின்னர், ஜன்னல் வழியாக பார்த்த போது சுதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலர்கள் இருவரும் உறவினர்களாக இருந்த போதிலும் பெற்றோர்கள் எதிர்ப்பால் இருவரும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.