மதுரை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஆக.,4) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும். அதேபோல் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் நாமக்கல் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆக.,5) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதேபோல் கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal