கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், இறந்த மாணவியை தூக்கி செல்வதாக ஒரு வீடியோ காட்சி வெளியானது. இந்த வீடியோ காட்சியை தாங்கள்தான் முதன் முதலாக ஒளிபரப்புவதா வலைதளங்கள் பதிவிட்டு வந்தன.

இந்த நிலையில்தான் ‘இந்த சி.சி.டி.வி. காட்சியில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது’ மாணவியின் தாய் கூறியிருப்பது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த, 13ம் தேதி தரைத்தளத்தில் இறந்து கிடந்தார். மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், அதிகாலை நான்கு பேர் கீழே கிடந்த மாணவியை தூக்கிச் செல்வது போன்ற ‘சிசிடிவி’ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சிகள் தொடர்பாக மாணவியின் தாய் செல்வி கூறும்போது, ‘‘இன்று (நேற்று)சிசிடிவி காட்சிகளை வெளியிடுவோர் ஜூலை 13ம் தேதியே காண்பித்திருக்கலாம். எங்களிடம் 13ம் தேதி 3:30 மணிக்கு ஒரு நிமிட சிசிடிவி காட்சியை காண்பித்தார்கள். அதில் எனது மகளை தூக்கிச் செல்வது போன்று எதுவுமே இல்லை. சிசிடிவி காட்சிகளை யார் வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

இப்போது வெளியான காட்சிகள் அப்பட்டமான பொய்யான ஒன்று. எனது மகள் கீழே விழும் காட்சிகளுடன் வீடியோ வெளியிட்டிருந்தால் சந்தேகம் தீர்ந்திருக்கும். ஆனால் அதனை மறைத்து துண்டு துண்டாக வீடியோவை வெளியிடுகின்றனர். எங்களுக்கு சந்தேகம் உள்ளது’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal