கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்றும்(ஆக.,2), நாளையும்(ஆக.,3) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும்,

நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, சிவகங்கை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல்மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32- 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33- 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal