தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ்.ஸின் பண்ணை வீட்டில் எடப்பாடி பழனிசாமியில் ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவதுதான், அ.தி.மு.க.வில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ.பி.எஸ் மறறும் இ.பி.எஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு பின் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியை கைப்பற்ற மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடனும், ஆதரவாளர்களுடனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தேனி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.

சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, சேலம் ரவி உள்பட ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அதன்பிறகு அவர்கள் நிருபர்களிடம் பேசியபோது, ‘‘அ.தி.மு.க உருவான காலத்தில் இருந்து நிர்வாகிகளை அரவணைத்து செல்லும் தலைமையே கட்சியில் இருந்து வந்தது. ஆனால் அதுபோன்ற நிலை தற்போது இல்லை. உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி ஓரம்கட்ட நினைப்பது பெரும்பாலான அ.தி.மு.க தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டுமானால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவி கொடுத்துவிட்டு வேண்டாதவர்களை காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவிக்க உள்ளோம். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான நிலையையே எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

மரியாதை இல்லாத இடத்தில் இருப்பதை தவிர்த்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருவதாகவும், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal