மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இக்கட்சியை சேர்ந்த தொழில் துறை மந்திரி பார்தா சட்டர்ஜி ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

மேலும் மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுப்ரதா முகர்ஜி, மற்றும் சதன் பாண்டே ஆகியோர் சமீபத்தில் மரணம் அடைந்துவிட்டனர். முறைகேடு தொடர்பாக கைதாகி உள்ள பார்த்தா சட்டர்ஜியிடம் 4 முக்கிய துறைகள் இருந்தது.

அதே போல் மரணம் அடைந்த 2 மந்திரிகளும் முக்கிய துறைகளை தங்கள் வசம் வைத்து இருந்தனர். சில மந்திரிகளின் செயல்பாடுகளும் அவருக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. இதனால் 4 பேருக்கு அவர் கல்தா கொடுக்க திட்டமிட்டு உள்ளார் .

இதையடுத்து மந்திரி சபையை மாற்றி அமைக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்தார். புதுமுகங்கள் சிலருக்கு அவர் மந்திரி பதவி கொடுக்க திட்டமிட்டு உள்ளார். அதன்படி நாளை (3-ந் தேதி) மேற்கு வங்காளத்தில் மந்திரி சபை மாற்றி அமைக்கப்படுகிறது.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:- மந்திரி சபையில் தலைமை இல்லாத பல்வேறு துறைகள் உள்ளன. அர்ப்பணிப்பு இல்லாத மந்திரிகள் கொண்ட துறைகளும் உள்ளது. அனைத்து துறைகளையும் என்னால் மட்டும் சரியாக கவனிக்க முடியாது. அதனால் அதன் பணிகளை பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (புதன்கிழமை) மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதில் புதிதாக 4 முதல் 5 பேர் வரை இடம் பெறுவார்கள். மேற்கு வங்காள மாநிலத்தில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

இதனால் மாநிலத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆக உயருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal