‘தமிழகத்தில் காவல் துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது’ என, நடிகை கஸ்தூரி ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.

கோவையில் தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடிகை கஸ்தூரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

‘‘கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும், மர்ம மரணங்களும் அதிகரித்துள்ளன. இப்படிபட்ட சம்பவங்கள் தனியார் பள்ளிகளில் நடக்கும் போது, அதை அரசியல் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் மூடி மறைக்கும் போக்கு உருவாகியுள்ளது. இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மக்களுக்கு காவல்துறை மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சம்பவத்தில் ஒரு உயிர் இழந்துள்ளதை கண்டுகெள்ளாமல், அதற்கு காரணம் பா.ஜ.க,வா?, தி.மு.க.,வா? என்ற அடிப்படையில் விவாதம் நடக்கிறது. மூன்று நாட்களாக மாணவியின் பெற்றோர் விளக்கம் கேட்டபோது எந்த பதிலும் தராத அரசு, கலவரம் நடந்த பிறகு பல அறிக்கைகள் விட்டது. அ.தி.மு.க., ஆட்சியின் போது காவல் துறையை நம்பாதீர்கள் என கூறிய தி.மு.க., தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காவல் துறை காரணமில்லை; சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என்கிறது.

கடந்த ஆட்சி காலத்தில் இதே கருத்தை முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கூறிய போது விமர்சித்தவர்கள், தற்போது கூறுவதை எப்படி ஏற்க முடியும். பள்ளிகளில் குற்றம் நடந்தால், பள்ளியின் பெயரை கூறுவதில்லை. அதற்கும் அரசியல் தான் காரணம். கோவையில் அரசு பள்ளி ஆசிரியர், மாணவிகளிடம் அத்துமீறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘போக்சோ’ சட்டத்தை போன்று எத்தனை சட்டங்கள் வந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தினால் மட்டுமே பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் குறையும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஆசிரியர்கள் ஈடுபடும் பட்சத்தில் அப்பள்ளியை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும், மாணவி தற்கொலை செய்து கொண்டால், அவரின் இறுதிச்சடங்கு, சடலம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்திகளில் காட்டாமல், தற்கொலைக்கான காரணம், போலீசாரின் நடவடிக்கை குறித்து ‘அப்டேட்’ செய்ய வேண்டும் என மீடியாவுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்’’ இவ்வாறு, அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal