‘தமிழகத்தில், 5 ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கி, 18 ஆயிரம் வகுப்பறைகள், தேவையான கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியம், புளியங்கடை தொடக்கப்பள்ளி, செங்கரடு நடுநிலை, நாராயணதாதனூர் தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு, 75 லட்சம் ரூபாய் மதிப்பில், தலா, 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி ஆணையை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வழங்கினார். சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழ, ‘‘மலைவாழ் மக்கள் கல்வி அறிவை ஊக்கப்படுத்த, அப்பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்காட்டில் ஆய்வு நடத்தியபோது, புளியங்கடை, செங்கரடு பள்ளிகளில் கட்டமைப்பு, தடுப்புச்சுவர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. இங்கு புது கட்டடங்களை கட்டவும், அதுவரை மாற்று ஏற்பாடாக, அருகில் உள்ள பள்ளியில் மாணவ, மாணவியரை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் முழுதும், 10 ஆயிரத்து, 31 பள்ளிகளில் பாதுகாப்பற்ற கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், 5 ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கி, 18 ஆயிரம் வகுப்பறைகள், தேவையான கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 1,300 கோடி ரூபாய், இந்த ஆண்டு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளன.

தேவையான வகுப்பறைகள் இல்லாத, 2,500 பள்ளிகளுக்கு தனி முக்கியத்துவம் அளித்து, உடனே கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளி குழந்தைகளின் உடல்நலம், மன ரீதியான ஆலோசனை வழங்க, தமிழகத்தில், 413 வட்டாரங்களுக்கு தலா, 2 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பள்ளிகளில், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனை வழங்குவர்’’இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal