ரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அமைச்சர்களுக்கு ‘டெல்லி’ குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது!

மேற்கு வங்கத்தில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் பெண் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய ‘ரெய்டில்’ கோடிக்கணக்கில் பணம், நகை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அவரை கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளார்.

இதே போல தமிழகத்தில் நடக்குமா? தமிழக அமைச்சர்கள் யாராவது இப்படி மாட்டுவரா என அ.தி.மு.க.,வினர் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக ஒரு விஷயம் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நடந்த பிரிவு உபசார விழாவில், தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். அவர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச முடியாவிட்டாலும், இந்நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசினார்.

அப்போது ‘மேற்கு வங்கத்தில் செய்தது போல், தமிழகத்திலும் தி.மு.க., அமைச்சர்கள் மீது வழக்கு போடுங்களேன்; அவர்களின் ஊழல் வெளியே வர வேண்டும். ஒரு வருடத்தில் சில அமைச்சர்கள் கோடிகளை குவித்திருக்கின்றனர்’ என பிரதமரிடம் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு, பழனிசாமியின் கைகளைப் பிடித்தபடி பிரதமர் சிரித்தாராம்.

இது பற்றி டெல்லி மேலிட வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் கடந்த ஒரு வருடத்தில் கோடிகளை குவித்திருப்பது மத்திய உளவுத்துறையின் மூலம் டெல்லிக்கு ஆதாரத்துடன் தகவல்கள் சென்றிருக்கிறது. அதாவது, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்னும் வெளிச்சந்தையில் அறிமுகம் ஆகாமல் இருக்கும் ரூ.4 கோடி மதிப்புள்ள காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார்.

அதே போல், ‘திருச்சி அருகே ரூ.200 கோடி மதிப்பில் நிலங்களை வாங்கிக் குவித்திருப்பதாக, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி., ப.குமார் குற்றச்சாட்டியிருந்தார். அந்த நிலத்தின் மதிப்பை உயர்த்து முயற்சியிலும் கே.என்.நேரு ஈடுபட்டிருப்பதாக ப.குமார் அ.தி.மு.க மேடையிலேயே குற்றஞ்சாட்டியிருந்தார்.

மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் டெண்டர் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். ‘என் மீது தவறு இருந்தால் வழக்கு போடட்டும்’ என்று செந்தில் பாலாஜியும் பதிலடி கொடுத்திருந்தார். ‘நெருப்பில்லாமல் புகை வராது’ எனவே முறைகேடு நடந்திருக்கலாம் என்கிறார்கள்.

அதே போல், ‘தீபம்’ மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் சைலன்ட்டாக ஒரு வருடத்தில் கோடிகளை வாரிக் குவித்திருக்கிறாராம். இவரைப் பற்றிய தகவல்களையும் மத்திய உளவுத்துறை மூலம் மேலிடம் வாங்கியிருக்கிறதாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க. அமைச்சர்கள் மீது வருமான வரித்துறையின் நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள். இது தொடர்பாக டெல்லி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறதாம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதையெல்லாம் மீறி சில அமைச்சர்கள் கல்லா கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்களாம். இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், கலைஞர் இருக்கும் போதுகூட இப்படி அமைச்சர்கள் விலையுயர்ந்த கார், நிலங்களை வாங்கவில்லை. உடனடியாக ‘‘என்னய்யா பண்ற…’ என்று கேள்வி கேட்டுவிடுவார். ஆனால், ஸ்டாலின் தற்போது, கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது. காரணம், தி.மு.க.வில் ஏதேனும் பிளவு ஏற்படாதா என ‘மேலிடம்’ பார்த்துக்கொண்டிருக்கையில், அமைச்சர்களை கண்டித்து இங்கிருந்து ஒரு ‘ஏக்நாத் ஷிண்டே’ புறப்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதனால்தான் கண்டிப்பு காட்ட தயங்குகிறார்’’ என்று வித்தியாசமாக நம்மிடம் கூறினார்கள்.

ஆனால், வேறு சில உடன் பிறப்புக்களோ, ‘‘உள்ளாட்சிப் பிரதிநிகளுக்கே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படியிருக்கையில், அமைச்சர்களையும் தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறார். யாரும் ‘எல்லை’ மீறவில்லை’’ என்றனர்.

ஆக, மொத்தத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, தமிழக அமைச்சர்களுக்கு குறி வைக்கப்படும் என்பதுதான் லேட்டஸ்ட் தகவலாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal