அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ‘முறைப்படி’ பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்!

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து ஜூன் 23&ந்தேதி பொதுக்குழுவை கூட்ட, பொதுக்குழு & செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை படித்துப் பார்த்து ஒப்புதல் அளித்தார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், பன்னீருக்கு தெரியாமலேயே ‘ஒற்றைத் தலைமை’ தீர்மானத்தை கொண்டுவர எடப்பாடி தரப்பு முடிவு செய்திருந்தது.

இந்த விவகாரம் ஓ.பி.எஸ். தரப்பிற்கு தெரியவர, புதிய தீர்மானங்கள் எதுவும் கொண்டுவரக்கூடாது என உயர்நீதிமன்றத்தை நாடினர். அப்போதுதான் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருக்குமான யுத்தம், வெட்ட வெளிச்சமானது. அப்போது நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தினர். அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கினார். மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுச் செயலாளர் தான் கட்சியின் அதிகாரமிக்க தலைவர் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக கட்சியை தன் வசப் படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தொடர்ந்து கூறி வருகிறது ஓபிஎஸ் தரப்பு. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இன்றி விடுக்கப்படும் பொதுக்குழு அழைப்பு செல்லாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓபிஎஸ். ஆனால், நீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தது. பொதுக்குழு நடத்த தடை இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்த வழக்கு, மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுகவில் இரு தரப்பினரும், புதிதாக நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். எதிர் தரப்பினரை கட்சியை விட்டு நீக்கி, அனைத்து பதவிகளுக்கும் தங்கள் ஆதரவாளர்களை நியமித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச் செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள் உள்ளிட்டோரை நியமித்துள்ள நிலையில், ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே கட்சியில் தற்போது இருப்பதாக கருதுகிறார்.

அடுத்தகட்டமாக பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த திட்டமிட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த பொதுக்குழுவும் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திலேயே நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பொதுக்குழுவிற்கான அழைப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் இணைந்து விடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகு பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து அழைப்பு விடுக்கும் பொதுக்குழுவே செல்லும். அதனால், தங்கள் தரப்பு நடத்தும் பொதுக்குழு தான் செல்லும் என அவர் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுத இருக்கிறார்களாம். இ.பி.எஸ். பக்கம் அதிக ஆதரவாளர்கள் இருந்தாலு,கட்சி விதிகளை மீறி எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதைத்தான் முன்வைத்து களமாட இருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு.

அதேபோல, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவும் ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், தற்போது கட்சி ஆலோசனைக் கூட்டங்களை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தி வருவதால், கட்சிக்கு அலுவலகமும் தேடப்பட்டு வந்தது. அதன்படி மந்தைவெளி பகுதியில் அதற்கான கட்டடத்தையும் முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவை கூட்டி தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அதன் விபரங்களை தாக்கல் செய்த பிறகு, அ.தி.மு.க. அலுவலகத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்படும். அதே, சமயம் மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal