கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அதிமுக செயற்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஜூலை 13ம் தேதி ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரிகை விடுக்கப்பட்டது. இந்த பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டவில்லை. தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியாது. விதியை மீறி இந்த பொதுக்குழு நடந்து உள்ளது.
இதனால் பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும். விதிப்படி மட்டுமே பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் இந்த பொதுக்குழு விதியை மீறி நடந்துள்ளது என்று ஓபிஎஸ் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது ஓபிஎஸ் வழக்கில் தன்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று கேவியட் மனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் அதிமுக தலைமை நிலையம் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று நடந்த விசாரணையில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
இதில் ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தில், ‘‘அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் முக்கியமான பலர் விதிகள் மீறப்பட்டுள்ளன. கட்சியின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர். என்னுடைய ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடந்துள்ளது’’என்று கூறப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் மனுவை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ‘‘ஜூலை 11 பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் புதிதாக விசாரிக்கட்டும். உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர் நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது. அதிகபட்சம் 3 வாரத்திற்குள் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடரட்டும். இதில் நாங்கள் கருத்து சொல்ல போவதில்லை’’ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப் படிதான் பொதுக்குழு கூட்டம் நடந்தது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பிற்கு சாதகமாகத்தான் தீர்ப்பு என்றும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!