அ.தி.மு.க.வில் அதிகார யுத்தம் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், 80 சதவீதம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிய நிலையில், ‘நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க.’ என திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் கொளுத்திப் போட்டிருப்பதுதான் அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியை எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் சந்தித்து, தங்களுக்குத்தான் ‘மேலிட ஆதரவு’ என நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர். ஆனால், மோடியை வரவேற்க எடப்பாடிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதே போல், பிரதமரை வழியனுப்ப பன்னீருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தவிர இருவராலும் பிரதமர் மோடியை சந்தித்து தங்களுக்கான ஆதரவை கேட்டுப் பெற முடியவில்லை.

இந்த நிலையில்தான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனிடம், ‘நீங்களும் போட்டி பொதுக்குழுவை நடத்துவீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நாங்கள் போட்டி பொதுக்குழு நடத்துவதா..? நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க… நாங்கள் ஏன் போட்டிப் பொதுக்குழுவை கூட்டவேண்டும். நாங்கள் கூட்ட இருப்பதுதான், எம்.ஜி.ஆர். வழிவந்த அ.தி.மு.க.வினர் நடத்தும் ஒரிஜினர் பொதுகுழு’ என ஒரே போடாக போட்டார்!

ஓ.பி.எஸ். அணிக்கு கு.ப.கிருஷ்ணன் ஆதரவு தெரிவித்ததில் இருந்து, திருச்சியில் ஓ.பன்னீருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திருச்சி மண்டல அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர். இன்னும் சில நிர்வாகிகள் இணைய தயாராகி வருகிறார்கள்.

எனவே, விரைவில் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் விதமாக ஓ.பி.எஸ். சில காய்களை நகர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காக மூத்த நிர்வாகிகள் அடங்கிய ஒரு டீம் இரவு பகலாக வேலை பார்த்து வருகிறதாம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal