அ.தி.மு.க. பொதுக்குழு… உச்சநீதிமன்றதில் எடப்பாடி அவசர மனு!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் எடப்பாடியார் தரப்பு அவசம் அவசரமாக மனு தாக்கல் செய்திருக்கின்றனர்!

சென்னை வானகரத்தில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புகுந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்குமிடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முக்கிய முடிவுகள் அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேலும் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளருக்கே இனி முழு அதிகாரம் இருக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்க முடியாது என்று தெரிவித்து தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார்.

இதனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி என 2 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு போடப்பட்டது. இது தொடர்பாக ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மனுவில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து இல்லாமல் உரிய இடைவெளி இன்றி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதனை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் தலைமையிலேயே செயலாளரான எஸ்.பி. வேலுமணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை. பொதுக்குழு கூட்டத்தில் அங்கீகாரம் பெறாததால் அந்த பதவி காலாவதியாகி விட்டது. கடந்த 11-ந்தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு உட்பட்டே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடனேயே பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழு தொடர்பாக ஏதாவது உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால் அது தொடர்பாக எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும். இவ்வாறு கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெறும் விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார்கள். இதன் பிறகே பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal