தமிழகத்தில் கச்சத்தீவு மீட்புக்குழு, காவிரி மீட்புக்குழு, பசுமை மீட்புக்குழு, மொழியுரிமை மீட்புக்குழு என்று சொல்வதோடு பல கட்சிகளிலும் பல உரிமை மீட்புக்குழுக்கள் இருந்தன, இருக்கின்றன. கிராமங்களில் ஆங்காங்கே,குளங்கள் மீட்புக்குழு, ஆக்கிரமிப்புகள் மீட்புக்குழு, வரத்து வாயக்கால் மீட்புக்குழு என்ற பெயர்களில் பல வாட்ச் அப்குழுக்கள், இளைஞர்கள் குழுக்கள் எல்லாம் செயல் பட்டு வருகின்றன.

அண்மையில் தமிழகம் தழுவிய அளவில் பிரபலமடைந்திருந்தது. அதிமுகவை மீட்டெடுக்கவும் அக்கட்சியின் தலைமை அலுவலகம். அக்கட்சியின் சின்னமான இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றை மீட்டெடுக்கவும் இரு தரப்பினரும் நடத்திய சட்டப் போராட்டங்களும் கலவரங்களும் நாடறிந்தவை ஆகும். ஒரு தரப்பினர் இப்போதைக்கு மீட்டெடுத்திருக்கிறார்கள் என்றாலும் எதிர் காலத்தில் அந்தக் கட்சி நிறைய சோதனைகளை எதிர் பார்த்துக் காத்திருக்கிறது.

அதற்குக் காரணம் அந்தக் கட்சியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்டுப்பாட்டில் இருந்தபோதெல்லாம் அவர்களின் ஒற்றைத் தலைமையின் கீழ் இருந்தது. ஆனால் அவர்களுக்குப் பின் பாஜகவின் கைகளுக்குக் கட்சி போய் நீண்ட காலமாகி விட்டது. நாம் இப்போது இதை நினைவு படுத்தக் காரணம் இப்போதைக்கு எடப்பாடி தரப்பினர் கையில் கட்சியின் தலைமை போயிருந்தாலும் அது நிலைத்து நிற்பதும் மாறுபட்ட நிலையை எடுக்கவும் பாஜகதான் காரணமாக அமையப் போகிறது.

இந்நிலையில் அதிமுகவிற்குள் புகுந்து பஞ்சாயத்துப் பேசிக் கொண்டிருக்கும் பாஜகவின் புதுக்கோட்டை நிலவரம் சற்று கலவரமாகத்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் இப்போது அனைத்துப் பிரச்சினைகளிலும் மூக்கை நுழைத்து பல இடங்களில் பிரச்சினைக்குக் காரணமே பாஜகவைச் சேர்ந்தவர்களால்தான் என்பதால் இப்போது அவர்களிடமிருந்து பாஜகவை மீட்டெடுத்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று பாஜகவின் ஒரு பிரிவினர் இப்போது பாஜக மீட்டெடுப்புக் குழு என்றொரு குழு அமைத்து ஊர்கள் தோறும் போய் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்கள்.

அப்படி கூட்டம் நடத்தி வருபவர்களில் ஒருவரான லட்சுமணன் என்பவர் இது குறித்துக் கூறுகையில். பாஜகவிற்கு நாங்கள் புதியவர்கள் அல்ல. பல்லாண்டு காலமாக இங்கு இருந்து கட்சி வளர்த்தவர்கள். அதிமுக, திமுக, பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் இந்த மாவட்டத்தில் ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பதே அதிகமாகத் தோன்றும் காலத்தில் இருந்து கட்சியை வளர்த்தவர்கள் நாங்கள்.

ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் புதிதாக வந்தவர்களால் மாவட்டம் முழுவதும் பிரச்சினை கிளம்புகிறது. கட்சியின் தீர்மானங்களில் ஒன்று குற்றப் பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதாகும். இது இங்கு மட்டுமல்ல, தலைமை வரைக்கும் அதுதான் விதிமுறை. அதை மீறி இங்கு குற்றப் பின்னணி உள்ளவர்களைச் சேர்க்கும்போது எதிர்ப்புகள் தெரிவித்தோம். அதனாலேயே கட்சியில் ஓரங்கட்டப் பட்டிருக்கிறோம். இப்போது வந்து சேர்ந்தவர்களுக்கெல்லாம் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை வழங்குகிறார்கள். குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்று சும்மா சொல்லவில்லை, சொந்தக் கட்சியில் உள்ளவர்களிடமே பண மோசடி செய்தவர்கள் எல்லாம் இப்போது கட்சிப் பொறுப்புகளில் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

இப்போது மாவட்டத் தலைவராக இருக்கும் செல்வம் அழகப்பன் வந்த பிறகு இது இன்னும் அதிகமாக இருக்கிறது. நாங்கள் கட்சி வளர்த்த காலங்களில் மற்ற கட்சிக்காரர்களைப் பகைத்துக் கொள்ள மாட்டோம். அதே நேரத்தில் பாஜகவை வளர்க்க வேண்டிய, பாஜக வளர வேண்டிய அவசியத்தை மட்டுமே எடுத்துச் சொல்வோம். ஆனால் இப்போது வந்திருக்கும் பலருக்கும் பாஜகவின் கொள்கையே தெரியாது. இவர்களால் எங்களுக்கும் நிறையப் பிரச்சினைகள் தேவையில்லாமல் வருகிறது. பல இடங்களிலும் மோதல் போக்குகளை எடுத்து வருகிறார்கள்.

அறந்தாங்கியில் சமீபத்தில் மாநிலப் பொறுப்பாளருக்கும் மாவட்டப் பொறுப்பாளருக்கும் (முரளி மற்றும் ரமேஷ்)இடையில் நடந்த பிரச்சினைகளுக்கும் இவர்கள்தான் காரணம். ஒரு சாராரைச் செயல்பட விடாமல் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

அது பற்றி கட்சியின் தலைமைக்கும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ஆனால் அதற்காக சும்மாவும் இருக்க முடியாது என்பதால் புதுகை பாஜக மீட்புக்குழு என்றொரு வாட்ச் அப் குழுவை அமைத்தோம். ஏற்கனவே கட்சியின் கொள்கைகளை நன்கறிந்தவர்கள், அதன் வழி நடப்பவர்களை எல்லாம் ஊர்கள் தோறும் சென்று சந்தித்து வருகிறோம். நிறையப் பேர் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். இதுவரை கட்சியின் அளவில் 21- ஒன்றியங்களில் சுற்றி வந்திருக்கிறோம். கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களைவிட அதிகமாக எங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். விரைவில் ஒன்று கூடி இப்போது பொறுப்பில் இருப்பவர்களிடமிருந்து பாஜகவை மீட்கப் போகிறோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் பழைய கட்சிக்காரர்கள், ‘‘ பொறுப்பாளர்கள் யாருக்கும் இப்போது கட்சியில் பதவி வழங்கக் கூடாது என்று அண்ணாமலையே சொல்லி விட்டார். அதனால் உங்கள் யாருக்கும் பொறுப்பு கிடையாது என்று மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பன் சொல்கிறார்.

ஆனால் அண்ணாமலை பொதுக்குழுவில் பேசும்போது எனது பெயரைத் தவறாகச் சிலர் பயன் படுத்துகிறார்கள் என்று சொன்னார். அவர் மாநிலத் தலைமைக்கு வருவதையே நாங்கள் எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறோம். இப்போதைக்கு அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க புதுகை பாஜக மீட்புக்குழுவாக ஒன்றிணைந்திருக்கிறோம்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal